திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.64 திருப்பூவணம்
பண் - தக்கேசி
அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்
குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறடையானிடமாம்
முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே.
1
மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர்
கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த
திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்பூவணமே.
2
தோரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க்
காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர்
பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணிபொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே.
3
கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர்வார்குழையன்
கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும பல்புகழாற்பரவச்
செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே.
4
கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம்
ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடம்நீடுந் தென்திருப்பூவணமே.
5
நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங்
குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்பூவணமே.
6
பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப்பூவணமே.
7
மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து
ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே.
8
பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங்
கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரியானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்துச்
செய்யார்கமலந் தேனரும்புந் தென்திருப்பூவணமே.
9
அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா
நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம்
மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்பூவணமே.
10
திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப்
பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல்இன்றமிழால்
நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com